தனித்துறை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்.
தனித்துறை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் 20ஆயிரம் பணியாளர்களை திரட்டி முதலமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரா ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் 4G விற்பனை முனையம் வழங்கப்பட வேண்டும். கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
சரியான இடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். மற்றும் ஓய்வுபெற்ற நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11அம்ச கோரிக்களை வலியுறுத்தி வருகின்ற ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஆகிய மூன்று நாட்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் உடன் இணைந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை திரட்டி முதலமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.