தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் குப்பையை பவுடராக்கும் நவீன கருவி பயன்பாட்டுக்கு திறப்பு.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை பவுடராக்கும் நவீன கருவியை அமைத்து, அதனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசா மிராசுதார் மருத்துவமனைகளில் நாள்தோறும் சுமார் இரண்டரை டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டதால் மலைபோல் தேங்கியது. இதனால் சுகாதார சீர்கேடும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டதையடுத்து, இந்த குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகள் நவீன இயந்திரத்தின் மூலம் பவுடராக மாற்றும் நவீன கருவி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் ரூ.1 கோடி நிதியில் நவீன கருவி அமைக்கப்பட்டது. இதனை நேற்று பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி.ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் எம்.சிங்காரவேலு, துணைத் தலைவர்கள் எம்.இளங்கோவன், செயலாளர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன், பொருளாளர் ஆர்விஎஸ்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ச.மருதுதுரை, நிலைய அலுவலர் செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் நமச்சிவாயம், மருத்துவக்கள் வி.வரதராஜன், பி.எஸ்.சுரேஷ், ராதிகா மைக்கேல் மற்றும் ஏராளமான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவி ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ.75 லட்சமும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சார்பில் ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மற்றும் இராசா மிராசுதார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் அனைத்தும், 300 முதல் 450 டிகிரி வெப்பத்தின் உதவியுடன் வெப்ப சிதைவு முறை மூலம் சாம்பலாக்கப்படும். இதில் எரிபொருள் கிடையாது. வெப்ப உலை கிடையாது. புகை வராது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், திடக் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு நவீன கருவி 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு திடக்கழிவு 1,200 கிலோ முதல் 1,500 கிலோ வரை அளிக்கப்பட்டு சுத்தமான பயன்பெறும் சாம்பலை பவுடராக பெற முடியும். இக்கருவியானது தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கருவியாகும் இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும். புகை மாசு ஏற்படாது என்றார்.