தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் 10 தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் 163 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற்றல் நிலைகளை கருத்தில் கொண்டும், கொரோனா பேரிடரால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டும் 2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எழுதவும், படிக்கவும், அடிப்படை கணக்குகளை செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே வகுப்பில் அவர்களின் நிலைகளுக்கு ஏற்றாற்போல் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் அமைக்கப்பட்ட ஆசிரியர் கையேடுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அரும்பு நிலை எனவும், இரண்டாம் வகுப்பு மாணவர்கள்
மொட்டுநிலை எனவும், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மலர் நிலை எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பயிற்சி நூல்கள் வழங்கப்படவுள்ளன. அந்த பயிற்சி நூல்களில் மாணவர்களின் நிலைகளுக்குத் தகுந்தவாறு செயல்பாடுகள் தரப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் அமைக்கவேண்டிய வகுப்பறை களங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக தமிழ் பாடத்திற்கு 5 வகுப்பறை களங்களும், ஆங்கிலப் பாடத்திற்கு 5 களங்களும், கணித பாடத்திற்கு 6 வகுப்பறை களங்களும் அமைக்கப்பட வேண்டும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பல்வேறு கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்படுத்தி எவ்வாறு வகுப்பறைச் சூழலை மகிழ்வுடனும், ஆர்வத்துடனும் மாற்றி அமைப்பது என்பது பற்றி கருத்தாளர்கள் தீபா, கயல்விழி,மங்கை மகமாயி,காயத்திரி,மாரிமுத்து, லீலாகண்ணன் ,ஜெயகணேஷ்,பிரகாஷ்,ராஜசேகர்,ஐயப்பன் ஆகியோர் விளக்கிக் கூறினர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர் பயிற்சி கையேடுகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன , மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளன என்பது பற்றி பயிற்சியில் விளக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் ஆசிரியர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மாதிரி வகுப்பினை எடுத்தனர். பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளையும் ஆசிரியர்கள் குழுக்களாக இணைந்து தயாரித்தனர். இறுதி நாளான இன்று ஆசிரியர்களுக்கான மதிப்பீடு மற்றும் பின்னூட்டமும் இணைய வழியிலே ஹைடெக் கணினி வகுப்பறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். இந்த ஐந்து நாள் பயிற்சியில் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் விமலாதேவி ,பாபி இந்திரா ஆகியோர் பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம் மற்றும் மனோகரன், ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் செய்திருந்தனர்.