தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்.
பிரதமர் பேசியது முதலே அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் பெருமிதம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கிபாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அதன்படி இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் எனக்கு தலையாட்டி பொம்மைகள் அனுப்பியுள்ளனர். இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தலையாட்டி பொம்மை அனுப்பிய அந்த சுய உதவி குழுவை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசியதன் மூலம் இந்தியா முழுவதும் தஞ்சை தலையாட்டி பொம்மைகளின் சிறப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் சிறப்பு பரவியது.
மேலும் தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களால் தஞ்சைக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை கிடைத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை தாரகை மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை சேர்ந்த மணிமேகலை என்பவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி மற்றும் அதிகாரிகளின் சீரிய முயற்சியால் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு தயாரித்த பொருட்கள் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. எங்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. எங்களை போன்ற பெண்களுக்கு சுய உதவி குழு மூலம் விடிவு காலம் பிறந்துள்ளது. நாங்கள் மகளிர் சுயஉதவி குழு தயாரித்த அனைத்துப் பொருட்களின் விற்பனை வருகிறோம்.
கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஜோடி டான்சில் பொம்மை, ஒரு ஜோடி தலையாட்டி பொம்மை ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலமாக அனுப்பி இருந்தோம். இன்று மண் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாங்கள் அனுப்பி இருந்த தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியது பெருமையாக உள்ளது. இனி மற்ற பெண்களும் சுயமாக பொருட்கள் விற்பனை செய்வர். பிரதமர் மோடி பேசியதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு கூடுதலாக புத்துயிர் கிடைக்கும். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி ஆகியோரே சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.