தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.
தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.
தர்மபுரி மாவட்டம் சக்கிலி நத்தத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவரது மனைவி பெருமா. கோவை, ஈரோடு பகுதிகளில் வெங்கடேசன், கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது தம்பி குமார்(40). விவசாயம் செய்து வந்ததுடன் இரண்டு கன்றுக்குட்டிகளையும் வளர்த்து வந்தார்.
சமீபத்தில் இந்த இரண்டு கன்றுக்குட்டிகளும் இறந்து விட்டன. தான் வளர்த்த கன்றுக்குட்டிகளை செய்வினை வைத்து தனது அண்ணனும், அண்ணியும் கொன்று விட்டதாக குமார் அவர்களிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு, என் கன்றுக்குட்டிகளை செய்வினை வைத்துக் கொன்று விட்டீர்கள் என்று கூறி, அண்ணனை குமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதைத் தடுக்க வந்த அண்ணியையும் வெட்டினார். இதில் இருவரும் சரிந்து விழுந்தனர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த வெங்கடேசன், பெருமா ஆகியோரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த பெருமா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தகவலறிந்து பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய குமாரை தேடி வருகின்றனர். கன்றுக்குட்டிகள் இறந்ததற்கு அண்ணன் தான் காரணம் என அவரை தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சக்கிலி நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.