தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது
இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரம் அடுத்த கரையூரில் இருந்து தாராபுரம் அண்ணாசிலை வரை நடைபயண பேரணி நடைபெற்றது.
கரையூரில் துவங்கிய நடைபயண பேரணியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி துவக்கி வைத்தார். கரையூர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மில்கேட், காளிபாளையம், மீனாட்சிபுரம், உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, ஐந்துமுனை சந்திப்பு, என்.என்.பேட்டை வழியாக அண்ணாசிலையை வந்தடைந்தது.
அங்கு மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் நடைபயணத்தை முடித்து வைத்து உரையாற்றினார். அப்போது அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ஊதியம் ரூ.26 ஆயிரம், மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும்.
வேலை நியமனத்தில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படுவதுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும். அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி தீர்மானிப்பதுடன், அது கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மத்திய சட்டம் இயற்றபடவேண்டும்.
அனைத்து வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும். ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை ஒரு முறை தள்ளுபடி செய்யவேண்டும்.
60 வயதான அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டம் நான்கையும் திரும்பப் பெறுவதுடன் மின்சார திருத்த மசோதா 2022 ஐ திரும்ப பெற வேண்டும். பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
பொது விநியோக திட்டத்தில் அனைவருக்கும் 14 வகையான அத்தியாவசியமான பொருட்களை வழங்கவேண்டும். வன உரிமைச்சட்டம் 2006 ஐ உறுதியாக அமல்படுத்துவதுடன் வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்கவேண்டும். விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதுடன் அவர்களுக்கான சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினார்.
நடைபயணத்தில் தாலூக்கா செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.