`திமுக எம்பி மகளிடம் மூலிகை பெட்ரோல் ரகசியத்தை ஒப்படைக்க போகிறேன்’- மீண்டும் களமிறங்கினார் ராமர் பிள்ளை.

தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரித்து வைத்திருப்பதாகவும், திமுக எம்பி மகளிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ரகசியங்கள் அனைத்தையும் தர உள்ளதாகவும் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ராமர் பிள்ளை… இந்த பெயரை யாரும் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து விட்டதாக கூறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். மோசடி, கைது என்று சிறைக்கு சென்ற ராமர் பிள்ளை தற்போது, தனியார் நிறுவனத்துடன் இணைந்து மூலிகை பெட்ரோல் வர்த்தக ரீதியலான பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீது குற்றச்சாட்டு வைத்து சிபிஐ என்னை கைது செய்தது. ஆனால் என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமல் சிபிஐ தோற்றுப் போனதாக தெரிவித்தார்.

என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் என்னிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்த ராமர் பிள்ளை, சிபிஐ என்னிடம் தோற்றுப் போன காரணத்தால் சிபிஐ அதிகாரிகளான முக்கர்ஜி, கதிரேசன் ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அதுமட்டுமன்றி செவ்வாய்க்கிழமை விசாரணை முடிந்த பிறகு புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ரகசியங்கள் அனைத்தையும் ஊடகம் முன்னிலையில் தர உள்ளதாகவும், அப்போது மூலிகை பெட்ரோல் தயாரிப்பு குறித்து தொடக்கத்திலிருந்து இறுதிவரை உள்ள முழுமையான செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் எனவும், தனது மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வகை வாகனங்களையும் இயக்கலாம் என்றும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியளித்தார் ராமர்பிள்ளை.
ஒரகடத்தில் உள்ள வேதாந்தா பயோ ஃபியூல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 40,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் ஒரு கோடி லிட்டர் தயாரிப்புக்கான மூலப் பொருளையும் நிஷாவுடம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.18க்கும், பெட்ரோல் 14 ரூபாய்க்கும் மக்களுக்கு சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “மூலிகை பெட்ரோல் மூலம், சமையல் எரிவாயு உருவாக்க முடியும். அதற்கு கூடுதலாக 200 ரூபாய் மட்டுமே செலவாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
