திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
தேவாரப் பாடல் பெற்ற இந்த கோவிலின் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.
மகேஷ் குருக்கள் தலைமையிலானோர் பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளையும் வளம் வந்த தேர் நிலையை அடைந்தது.
தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி தலைமையில் கோவில் உள்துறை சூப்பிரண்டு விருதகிரி மேற்பார்வையில் ஊழியர்கள் செய்திருந்தனர். பொறையார் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.