திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முக்கிய பகுதியான பாலக்கரை அருகே உள்ள காஜாப்பேட்டை பகுதியிலும் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகளுக்காக குழாய்கள் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென அந்த குழாய்கள் திடிரென தீ பற்றி எரிந்தது அதிக அளவிலான குழாய்கள் எரிந்ததால் அந்தப் பகுதியே கடும் புகைமூட்டமானது.
தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இருந்த போதும் சிறிது நேரம் அப்பகுதியை புகை சூழ்ந்து இருந்தது. மாநகரின் முக்கிய பகுதியில் நடந்த இத் தீ விபத்தை காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர்.
அதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது, வேண்டுமென்றே யாராவது குழாய்களை கொளுத்தினார்களா என்பது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.