திருச்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களின் இருச்சக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கி பிடித்து செயினை மீட்ட ஆட்டோ டிரைவர் – டிரைவர் செல்லையாவிற்கு பொதுமக்களிடையே பாராட்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் இரயில்வே ஊழியர் வினோஷ். இவரது மனைவி கோமளாதேவி. இவர் 4 வயது மகனை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சாலையோரம் நடந்து சென்ற கோமளாதேவியின் பின்னே இருச்சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், கோமளாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளனர். கோமளாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓட்டி வந்துள்ளனர்.

அதேநேரம் பள்ளி சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுனர் செல்லையா, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவாறு வந்துள்ளார். சற்றும் தாமதிக்காமல் ஆட்டோவை இருச்சக்கர வாகனத்திற்கு நெருக்கடி கொடுத்து சாலையில் நிறுத்த, இதை சற்றும் எதிர்பார்க்காத திருடர்கள் இருச்சக்கர வாகனத்தை ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதில் திருடன் ஒருவன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மற்றொரு திருடனை ஓடிவந்த பொதுமக்கள் பிடித்து செயினை மீட்டனர். பின் கை – கால்களை கட்டி தகவலறிந்து நிகழ்விடத்துக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணையில் பொதுமக்களிடம் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியினை சேர்ந்த மீனவரான விஜய் என்பதும், தப்பியோடிய நபர் திருச்சி எட்டரை கோப்பு பகுதியினை சேர்ந்த நவீன் என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காயமடைந்த விஜய் போலீஸாரால் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செயின் பறிப்பில் காயமடைந்த கோமளாதேவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து. டி.எஸ்.பி. ராமநாதன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள். தப்பியோடிய மற்றொரு திருடனை தேடி வருகின்றனர்.
