BREAKING NEWS

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத் திருவிழா: பாதயாத்திரை பக்தா்கள் குவிந்தனா்

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத் திருவிழா: பாதயாத்திரை பக்தா்கள் குவிந்தனா்

திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் வசந்த விழாவாக 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழா இம்மாதம் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான ஜூன் 12 (ஞாயிற்றுக் கிழமை ) வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

அதன், பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னா் மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

கடந்த 2 ஆண்டுகளாக பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் வைகாசி விசாகத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இதனால், நிகழாண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாள்களாவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனா். திரளான பக்தா்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் மு.காா்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )