திருநெல்வேலி: ஆத்தங்கரைபள்ளிவாசலில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய வழக்கில் கேரள வாலிபர் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்த சாகுல் அமீது-நாகூர் மீராள் தம்பதியின் மகள் நஜிலா பாத்திமா (வயது 3). கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றார். அன்று இரவில் அந்த தம்பதிக்கு நடுவில் குழந்தை நஜிலா பாத்திமா தூங்கிக் கொண்டு இருந்தாள். 12-ந்தேதி அதிகாலை அங்கு வந்த மர்ம நபர், குழந்தை நஜிலா பாத்திமாவை நைசாக கடத்தி கொண்டு சென்றார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர், குழந்தையை தூக்கிக் கொண்டு சாலையோரமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே மறுநாள் அந்த குழந்தையை மர்மநபர் திருச்செந்தூரில் விட்டுவிட்டு தப்பி சென்றார். அதனை கூடங்குளம் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய மர்மநபரை கண்டுபிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு P.சரவணன் IPS உத்தரவின் பேரில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
தொடர்ந்து அந்த நபர் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு காவல் உதவி ஆய்வாளர் வினுக்குமார் தலைமையில் தனிப்படை விரைந்தது.
சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அங்கு முகாமிட்டு இருந்த தனிப்படையினர் நேற்று இரவு, குழந்தையை கடத்தி சென்ற அந்த நபரை கண்டுபிடித்ததனர். உடனே அவரை பிடித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது பருக்(34) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நஜிலா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த நகையை பார்த்த முகமது பருக் அதனை திருடுவதற்கு திட்டம் போட்டுள்ளார்.
இதையடுத்து பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த அந்த குழந்தையை நைசாக தூக்கி கொண்டு அவர் சென்றுள்ளார். திருச்செந்தூர் பகுதிக்கு கடத்தி சென்று குழந்தையின் கழுத்தில் கிடந்த நகையை கழட்டி பார்த்துள்ளார். அப்போது அந்த நகை கவரிங் என்று தெரியவந்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த முகமது பருக், நஜிலா பாத்திமாவை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கூடங்குளம் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
