திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாதா, பிதா, குரு தெய்வம் என்பதற்கு பதிலாக தற்போது மாதா, பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி தலைவர் ஜமால் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார். இயக்குனர் ஜைனுல் யாஸ்மின், பொருளாளர் அன்வர் பாட்ஷா, துணைத் தலைவர் முஹம்மது உசேன், இணைச்செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஷாஜகான் தொடக்க உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராம்குமார் வரவேற்றார்
அரசு தலைமை கொறடா கோவி செழியன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அண்ணா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த அஸ்ஸாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உற்பத்தி பொறியியல் பிரிவு மாணவர் பழனிபாபா மற்றும்
முதுகலை, இளங்கலை பிரிவில் பொறியியல் படிப்பு முடித்த 462 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில்,
கிராம பகுதியான திருமங்கலக்குடி பகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்கி இப்பகுதி மாணவர்களின் நலன் சார்ந்து உயர் கல்வி வழங்குவது பாராட்டுக்குரியது. மாநில அளவில் இக்கல்லூரியின் மாணவர் அண்ணா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கல்வி ஒன்றே சமுதாயத்தில் சமத்துவத்தை தரக்கூடியது. மாணவர்கள் குறிப்பாக பட்டம் பெற்றவர்கள் சமுதாயத்தில் பலருடன் பழக சாதிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் இதுதான் நீங்கள் சாதிப்பதன் முதல் படியாக அமையும் அனுபவம் தான் மிகப்பெரிய நன்மையை தரும்.
தற்போதைய தொழில்நுட்ப வசதியோடு கல்வி கற்ற மாணவர்கள் அவர்களுக்கான இடத்தை அவர்களே தேர்வு செய்வார்கள். இருப்பினும் பெற்றோர்கள் அக்கறையால் கவலைப்படுகிறார்கள்.
மாதா, பிதா, குரு தெய்வம் என்பதற்கு பதிலாக தற்போது மாதா, பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. இப்படி எதற்கெடுத்தாலும் கூகுள் உதவியோடு தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்தினால் எதைப் பற்றியும் ஆராய்ந்து தேடல் என்பது இல்லாத நிலை உருவாகி விடும். இதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
உலகமயமாக்கல் என்ற நிலை இருந்தாலும் கடந்த 1990ம் ஆண்டுக்கு பிறகு தனி மனித கண்டுபிடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை என்பது ஏக்கமாக குறையாக ஏமாற்றமாக உள்ளது.
தனி நிறுவனங்களின் பெயரில்தான் ஒரு சில கண்டுபிடிப்புகள் வருகிறது. பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய வகையில் தாங்கள் படித்த கல்வியை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் வெற்றி காண வேண்டும்.

பள்ளி படிப்பான 11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் போது கல்லூரிகளில் உள்ள படிப்பு பிரிவுகள், அதனால் வரும் வேலை வாய்ப்புகள், வருமானம் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக எடுத்தும் கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் பள்ளிகளில் நான் முதல்வன் என்ற திட்டம் முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது மாணவர்களுக்கு உரிய உயர்கல்வியை தேர்வு செய்ய உறுதுணையாக அமையும்.
பட்டம் பெற்றவர்கள் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு குறையில்லாமலும், பிறர் யாரும் கைநீட்டி கேள்வி கேட்கும் நிலை உருவாக்காமல் பலரும் பாராட்டு விதம் அனைவருடன் இணைந்து வாழ்வதற்கு உழைக்க வேண்டும்.
வேலை தேடி செல்வதை விட 10 பேருக்கு வேலை தரக் கூடிய வகையில் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். வருங்காலம் இன்றைய மாணவர்களாகிய உங்களை நம்பியே உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். சாதிக்கலாம் என்றார்.
இதில் ஒன்றிய குழு துணை தலைவர் கோ. க அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் ராஜா, திருவிடைமருதூர் ஒன்றிய குழு துணை தலைவர் பத்மாவதி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
