BREAKING NEWS

திருவண்ணாமலையில் 3வது நாளாக நடந்த மாநில இளையோர் தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்கள்-இன்று மாலை நிறைவு விழா.

திருவண்ணாமலையில் 3வது நாளாக நடந்த மாநில இளையோர் தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்கள்-இன்று மாலை நிறைவு விழா.

திருவண்ணாமலை மாவட்டம்,

 திருவண்ணாமலையில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டி 3வது நாளாக நேற்று நடந்தது. அதில், இளம் வீரர்கள் கடந்த கால சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்தனர்.

 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 36வது மாநில இளையோர் மாநில தடகளப் போட்டிகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. 

 

திருவண்ணாமலை மாவட்ட தடகளச் சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தும் இப்போட்டிகளை மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

 

அதில், 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என 4 நிலைகளில், ஆண்கள் பிரிவில் 64 போட்டிகளும், பெண்கள் பிரிவில் 62 போட்டிகளும் நடக்கிறது. 

 

அதில், மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், தடை தாண்டிய ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடந்து முடிந்தது. போட்டியின் 3வது நாளான நேற்று ஓட்டம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 30 போட்டிகள் நடந்தது. 

 

இந்நிலையில், நேற்று நடந்த போட்டிகளில் பல்வேறு வீரர்கள், கடந்த கால சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.மிச்சேல்பெல்ஷியா, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 6:47:95 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். 

 

அதேபோல், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், சென்னையை சேர்ந்த பிரதிக்‌ஷாயமுனா, 5.89 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். 

 

அதேபோல், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் உயரம் தாண்டுதலில் சென்னையை சேர்ந்த ஜி.பாவனா, குண்டு எறிதலில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வி.மதுமிதா, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நீலகிரியை சேர்ந்த அகாஞ்சா,

 

  18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஹர்ஷிதா, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் நெல்லையை சேர்ந்த அபிநயா, 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த ரூப ஆகியோர் புதிய சாதனை படைத்துள்ளனர்.

 

இந்நிலையில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை 5 மணிக்கு, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

 

மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்குகிறார்.

 

விழாவில்,  தடகளச்சங்க மாநில தலைவர் டபிள்யு.ஐ.தேவாரம், எஸ்பி கார்த்திகேயன், இந்திய தடகளச்சங்க இணைச்செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )