தி.மு.க. முழுக்க, முழுக்க கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு.

தஞ்சையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்து முன்னணியின் பிரச்சார பயணம் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி சென்னையில் முடிவடையும். இன்று (நேற்று) 10-வது நாள் நிகழ்ச்சி. கல்வியில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. நிறைய மதமாற்றங்கள் நடக்கின்றது. கோவில் சொத்து அரசாங்கத்திடம் உள்ளது.
சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் உள்ளது. மசூதி சொத்து முஸ்லிம்களிடம் உள்ளது. இதையெல்லாம் சமமாக கொண்டு வர வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார பயணம் செய்து வருகிறோம். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 150-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மசூதி, தேவலாயங்கள் உள்ள இடங்கள் இடிக்கப்படுவதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட விரோதமாக தேவாலயங்கள், மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பல கட்டங்களாக போராட்டம் நடத்தியும் சரியான பதில் இல்லை. திருப்பூரில் நீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகும் அங்குள்ள திமுக எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டால் ஆக்கிரமிப்பு எடுக்கப்படவில்லை.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிலர் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் கோவில் இடத்தில் மசூதி உள்ளது. அதை சுற்றி கடைகள் உள்ளன. இதுபோல் நிறைய இடங்களில் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளன. அதை எடுப்பதற்கு அரசு தயாராக இல்லை. சென்னையில் கோவில் இடத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. தேவாலயமும் உள்ளது.
பலகட்ட போராட்டம் நடத்தியும் அதையும் எடுக்கவில்லை. தி.மு.க. முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் முஸ்லிம்கள் பலர் ஆக்கிரமித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள இரண்டு முக்கிய நபர்களும் இறை நம்பிக்கை உள்ளவர்கள். சரியான எதிர்கட்சி இருக்க வேண்டும் என்றால் இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
