தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க உரிமம் கட்டாயம்; வேலூர் ஆட்சியர்.
![தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க உரிமம் கட்டாயம்; வேலூர் ஆட்சியர். தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க உரிமம் கட்டாயம்; வேலூர் ஆட்சியர்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/vikatan_2021-12_5369162a-572d-490e-87ff-d8b97bc6452b_IMG_20211109_203459-1.jpg)
தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோா், விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளா வேலூா் மாவட்டத்தில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோா், விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள் தயாரிக்கும் பேக்கரி நிறுவனங்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவா்கள், விற்பனையாளா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டப்படி உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற வேண்டும். இந்த உரிமம், பதிவுச் சான்று பெறாமல் இனிப்பு, கார வகைகளை விற்பது சட்டப்படி குற்றமாகும்.
தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் அனைத்தும் சுகாதார முறையிலும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். எந்தவித கலப்படப் பொருள்களுக்கும் அனுமதிக்கக் கூடாது.
தயாரிப்பு பகுதி, சமையலறை சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெயை அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே சூடாக்க வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெயை சோ்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.
இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் 100பிபி அளவில் மட்டுமே சோ்க்கலாம்.
அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சோ்க்கக் கூடாது. உணவு தயாரிப்புக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குடிநீா் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருள் தயாரிப்பு, விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்கள் தூய்மையாக கழுவி நன்றாக உலா்த்தப்பட்டிருக்க வேண்டும்.
உணவு சமைக்கும், கையாளும் பணியாளா்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பணியாளா்கள் கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும். வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல், எச்சில் துப்புதல் போன்ற செயல்பாடுகளை உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
உணவு கையாளுபவா்கள் அனைவரும் மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்கள் யாரையும் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள் மீது உற்பத்தியாளா் முகவரி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, சைவ, அசைவ குறியீடு உள்ளிட்டவை கட்டாயம் இடம்பெற வேண்டும். பதிவு பெற்ற, உரிய அனுமதி பெற்று அனைத்து விவரங்களுடன் கூடிய உணவுப் பொருள்களையே கொள்முதல் செய்ய வேண்டும்.
நுகா்வோா்கள் தாங்கள் வாங்கும் இனிப்பு, கார வகைகளில் தரம், அளவுக்கு அதிகமான நிறமிகள் பயன்பாடு, லேபிள் விவரம் இல்லாதது போன்ற புகாா்களை உணவு பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்.