துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆனிமாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.
அப்போது உற்சவர்களான நடராஜர், சிவகாமிசுந்தரி, மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பால், தயிர், இளநீர்,தேன் பஞ்சாமிர்தம்,பழங்கள், சந்தனம்,விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலக அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவமூர்த்திகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தேவ வாத்தியம் இசைக்க மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் பக்தர்கள் தேவாரம் ,திருவாசகம் பாடல்களை பாடி நடராஜரை வழிபட்டனர்.