BREAKING NEWS

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

பொருளுரை : அபிஷேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும், பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும், நீலோற்பல மலர் போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற, என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால், ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான்.

திருக்கலிக்காமூர்(அன்னப்பன் பேட்டை) : மெய்வகை ஞானம் உண்ட வேதியர், தோணி வீற்றிருந்தாரைத் தொழுது வீற்றிருந்த காலத்தில் மயேந்திரப்பள்ளி, குருகாவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்டு எய்திய பதிகளெல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்திப் பாடியவற்றுள் ஒன்று இப்பைந்தமிழ்ச் சொல்மாலை.

திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. (தற்போது அன்னப்பன் பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது) தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும்,. அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள், மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாக் போற்றிப் பாடியுள்ளார்.

பராசர முனிவர் அசுரன் உதிரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலய முகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அன்னப்பன் பேட்டை, தேனாம்பட்டினம் அஞ்சல், வழி மங்கைமடம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN – 609 106.

எப்படிப் போவது : சீர்காழி – திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது. ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தென்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )