தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் அவர்கள் முன்னிலை வகித்தார் , உறைவிட மருத்துவர் S.S. ராஜேஷ் அவர்கள் தலைமை தாங்கினார் .
இந்திய சமூக சேவை சங்கம் தமிழ்நாடு தலைவர் D. ஆறுமுகம் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அணைத்து மாவட்டங்களுக்கும் இருசக்கர இரதத்தின் மூலம் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுத்து வருகிறார் , இன்று தென்காசி மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார் . மேலும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இரா .ஜெஸ்லின் அவர்களும் பொதுமக்களுக்கு போதை பொருள் பயன்பாட்டால் வரும் இழப்பீடுகளை எடுத்துரைத்தார் .
ஏதோ ஒரு விதத்தில் ஒரு போதைப் பொருளை முதலில் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறார்கள்.
போதைப் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வும், சந்தோஷமும் கிடைப்பதாக அதைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.
போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்சினை உண்டாகிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
மது உடலின் உள்ளே செல்லச் செல்ல நம் உடலிலுள்ள வைட்டமின்களை அது அழித்து விடுகிறது.
மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.
தற்போது மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.
போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்சினைகளும் உண்டாகிறது என எடுத்துரைத்தார் .
மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்திய சமூக சேவை சங்கம் தமிழ்நாடு தலைவர் D.ஆறுமுகம் அவர்களை கவுரவிக்கும் விதமாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து அவரது இத்தகைய முயற்சியினை வாழ்த்தி பாராட்டி நன்றி தெரிவித்தார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி , பத்மா , ராஜாதி ஜெகதா , வசந்தி மற்றும் செவிலியர்கள் , மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
