தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.

உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான் பிரமிடு வடிவேல் வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை மேற்கொண்டார்.
வேள்வியின் நிறைவு விழா நேற்று நடை பெற்றது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச் செயலாளர் சுந்தரராமன் வரவேற்புரை வழங்கினார். சென்னை சில்க்ஸ் இயக்குனர் விநாயகம் தலைமை வகித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்து மதம் இரண்டு முக்கிய போதனைகளை அளித்து உள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது.
இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யா உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா அமைதியையே விரும்புகிறது. நமது நாட்டைச் சுற்றிலும் சீனா துறைமுகங்கள் அமைத்து தளவாடங்களை இறக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015 ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அன்றில் இருந்து ஏழு வருடங்களாக ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது உலக மாற்றம் ஏற்படவென்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும் மனிதன் மாறும் போது வீடு மாறும் கிராமம் மாறும் சமுதாயம் மாறும் நாடும் மாறும் நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார்.
உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். விழாவின் முடிவில் குரு மகான் அருளாசி வழங்கினார்.