தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோலைமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல் வரவேற்றார். இதில் தேசிய தலைவர் சந்திரபோஸ் பெருமாள், தேசிய துணைத் தலைவர் பழனிகுமார் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோவில்களும், சிறிய, கிராம கோவில்கள் என மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரம் கோவில்களும் உள்ளன. கட்டுப்பாடுகள் அவசியம் கோவில்களின் நிலங்களை, இடங்களை பயன்படுத்துவோர் முறையாக குத்தகையை வழங்கினால் தான் கோவில்களில் பூஜைகள் சிறப்பாக நடக்கும். இந்துக்கள் பெரும்பாலும் கோவில்களுக்கு வழிபட செல்லும் போது, ஏதோ கடமைக்காக செல்கின்றனர். பக்தியை காட்டிலும் தனது செல்வாக்கை பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றனர். அப்படி இருக்க கூடாது. தெய்வங்களை வழிபட அதற்கான கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்களிடம் கட்டுப்பாடான வழிபாட்டு முறை இருக்கிறது. ஆனால், இந்துக்களிடம் கட்டுப்பாடான வழிபாட்டு முறை இல்லை. நமக்குள் கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் பிரிவினைவாதம் வந்துவிட்டது. கோவில்களில் தினமும் பூஜை நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.