தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்.
தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்தவர் வைரவன் இவர் கடந்த 28ஆம் தேதி மாலை தனது மனைவி அமுதா மற்றும் அவரது இரண்டாவது குழந்தையை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது ஊரில் இருந்து பழனிசெட்டிபட்டி சென்று கொண்டிருந்தபோது…
மாரியம்மன் கோவில்பட்டி பிரிவு அருகே செல்லும் புதிய பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதியதில் வைரவன் மற்றும் அவரது குழந்தைக்கு லேசான காயங்களும் அவரது மனைவி அமுதாவிற்கு இடது குறுக்கு முறிவும் ஏற்பட்டது. காயம் பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவி மூலம் கா.விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்து 5 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்யாமலும் விபத்து ஏற்படுத்திய நபரை இதுவரையிலும் கைது செய்யவில்லை எனக் கூறி மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தேனி – போடி செல்லும் நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டி காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் விபத்து ஏற்படுத்தியவர் மீது இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக தேனி போடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.