நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய புதிய காசநோய் கண்டறியும் வாகனம் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலமாக உயர்தர கருவிகள் மூலமாக காசநோயை கண்டுபிடிப்பதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 என்ற இலக்கினை அடையும் வகையில் புதிதாக இந்த வாகனம் 23 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலா 46 லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்களில் ஒரு வாகனம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதியுடன் நவீன கணினி தொழில்நுட்பத்துடன் ஒரு மணி நேரத்தில் 10 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளது. எக்ஸ்ரே கருவியின் பயன்பாடு மற்றும் காசநோய் பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அகன்ற தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை காசோநோயின் தாக்கம் குறைந்து வருகின்றது இந்த எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக இந்த பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிப்பதன் மூலமாக காச நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற குடிசை பகுதி மக்கள், தொழிற்சாலை பணியாளர்கள், காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள், எச்ஐவி பாதிப்பு உள்ளானவர்கள், மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு சென்று இந்த எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ள காசநோய் கண்டறிய இந்த வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியான இருமல் சளி உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் தடுப்பு சக்தி குறைந்தவர்கள், அதிக இட நெருக்கடியில் வசிப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், குடி போதைக்கு ஆள்பட்டோர் மற்றும் எளிதில் காச நோய் தோற்று ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிகளை இந்த வாகனம் வரும்பொழுது இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த வாகன இயக்கத் தொடக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாரு ஸ்ரீ, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் சுகாதார துணை இயக்குனர்கள் டாக்டர் பொற்செல்வன், டாக்டர் சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், மாநகராட்சி சுகாதார நல அலுவலர் அரி கணேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
