நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்ஆர் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கவுன்சிலர்களின் உதவியாளர் சேட்டு கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை உறுப்பினர்களுக்கு படித்து காண்பித்தார்.
பின்னர் ஏழாவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் எழுந்து வரவு செலவு கணக்குகளை முறையாக கவுன்சிலர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை எனவும், அரசு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும், இதனால் மக்கள் பணி செய்ய முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காததால் கூட்டரங்கின் உள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் சக உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதன் பின்பு கவுன்சிலர் சிவக்குமார் மட்டும் வெளிநடப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய விசிக கவுன்சிலர் மேகராஜன் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்பதால் பணிகள் அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது என்று கேள்வி எழுப்பினார், கேள்விக்கு பதில் அளித்த பிடியோ சங்கர் எதிர்காலத்தில் சரி செய்வோம் என்றார்.
சேப்பாக்கம்,ஐவதகுடி பகுதி கவுன்சிலர் ஏழுமலை சேப்பாக்கம் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கிராமத்தின் முடிவு வரை உள்ள ஒன்றிய தார் சாலை மிக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைகின்றனர் ஆகையால் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார், கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய பெருந்தலைவர் செல்வி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து பூலாம்பாடி, நிராமணி பகுதி கவுன்சிலர் பச்சமுத்து நல்லூர் ஒன்றியத்தில் கவுன்சிலர் பணிகளை ஆளும் திமுக அரசு தலையீடு அதிகம் செய்கிறது என்றும் இதனை சரி தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிடியோ சங்கர் இதுபோன்று நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காது என்றும் கவுன்சிலர்களுக்கு என தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அரசு நிகழ்ச்சிகள் முறையாக தெரியப்படுத்தப்படும் என பதில் அளித்தார்.
மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் ஒன்றிய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.