நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து பம்பரமாக சுற்றி வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் கடந்த வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லேசான காய்ச்சல் இருந்தததையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது.
அதனையடுத்து தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுத்தார். ஆனால் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு கடந்த 14 ம் தேதியன்று அவரது குடும்பத்தினர் அவரை காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் முழுமையாக குணம் பெற்றதையடுத்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றில் இருந்து முதல்வர் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்தாலும், ஒருவாரம் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
