நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ரெஜினா நாயகம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் அ. தி.மு.க.வைச் சேர்ந்த யாகப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அண்ணாதுரை வரவேற்று பேசினார். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில் அ.தி.மு.க 10, தி.மு.க 7, பா.ம.க 1, சுயேச்சை 2 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், பா.ம. க 1 , சுயேச்சை 2 பேர்கள் உள்பட 13 பேர்கள் ஆதரவோடு அ.தி.மு. க. வைச் சேர்ந்த ரெஜினா நாயகம் தலைவராகவும், யாகப்பன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள், பா.ம.க 1 மற்றும் 2 சுயேச்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால், அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. இந்நிலையில் அதிமுக தலைவர், துணை தலைவர் எதிராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து கடந்த முறை நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில், திமுக மற்றும் திமுக ஆதரவு சுயேச்சை, பாமக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று நேற்று நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்திலும் திமுக மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்துக்கு பிறகு போதுமான கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இனி அடுத்த கூட்டம் தொடர்ந்து 3-வது கூட்டத்தில் திமுக மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாத பட்சத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு ஆணையாளர் பஞ்சவர்ணம் நிருபர்கள் கேட்டபோது கூறியதாவது: – உள்ளாட்சி சட்டத்தின்படி 3 வது கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் வரவில்லை என்றால் அது குறித்த தகவல் மாவட்ட உயர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.இதனால், நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
