BREAKING NEWS

பணி நேரத்தில் சுற்றுலா சென்ற அரசு மருத்துவர்: அதிரடி காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பணி நேரத்தில் சுற்றுலா சென்ற அரசு மருத்துவர்: அதிரடி காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் ஒருவரும், தனக்கு பதிலாக மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி எனும் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்க வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மலைக் கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள். டயாலிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

50 லட்சமாவது பயனாளிக்கு சித்திரப்பாக்கம் என்ற கிராமத்தில் மருந்துப் பெட்டகம் தரப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் 60-வது லட்சம் பயனாளிக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. தற்போது 75 லட்சம் பயனாளிக்கு நாமக்கல் மாவட்டம், போதைமலைக்கு உட்பட்ட கெடமலை என்ற மலைக் கிராமத்தில் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 75 லட்சம் பயனாளிகள் என்பது ஒரு மகத்தான சாதனை.

ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ. சண்முகவடிவு, பணி நேரத்தின்போது பணியில்லை. அதுபோல் மருத்துவர் டி. தினகரன் என்பரது மகன் டி. அஸ்வின் என்பவரும் மருத்துவர். இவர் அரசு மருத்துவர் கிடையாது. எனினும், தந்தையின் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

தங்களது குடும்பத்துடன் பணி நேரத்தின்போது ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அது அவர்களது சொந்த விஷயம். எனினும், பணி நேரத்தின்போது பணியில் இல்லை என்பது குற்றச்சாட்டு. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து துறையினர் செயலாளர் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.

விசாரணையில் இரு மருத்துவர்களின் செயல்பாடு உண்மையென தெரியவந்தது. இதையடுத்து இரு மருத்துவர்களும் நேற்று இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மருத்துவத்துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டுமென நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக 1,021 மருத்துவப் பணியிடங்கள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் நியனம் செய்யப்பட உள்ளது. சான்றிதழ் சாரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. எப்படியும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அவை நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )