பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் இருந்த மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகைகள் 512 பவுன் மாயம்: அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாஜக மனு!

வேலூர் மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இந்து சமய அறநிலைய துறையின் வேலூர் மண்டல இணை ஆணையர் விஜயாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிகொண்ட அரங்கநாயகி சமேத ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயில் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் வீற்றிருக்கும் சுவாமியை அலங்கரிப்பதற்காக மன்னர்கள் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்கள் தங்கம் மற்றும் விலை மதிக்க முடியாத ரத்தின கற்கள் பதித்த நகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது சுமார் 512 பவுன் நகைகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அவை எல்லாம் கடந்த
2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சுவாமிக்கு அணிவிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்போதிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக மன்னர்கள் வழங்கிய பாரம்பரிய நகைகள் கோயிலில் பாதுகாப்பாக இருக்கிறதா ? என்ற கேள்வி, சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. அதோடு இந்த நகைகள் குறித்த விவரங்களை அறநிலையத் துறையும் ஆய்வு செய்யாமல் இருப்பதால் மாயமாகி இருக்குமோ? அல்லது முறைகேடு நடந்திருக்குமோ? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவாமிக்கு மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் 50 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையே கோயில் வட்டாரத்திலும், ஊர் பெரியவர்கள் தரப்பிலும் ரூபாய் 100 கோடி மதிப்பிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் கோயில் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னர் நகைகள் பாதுகாப்பாக வைத்திருந்த அறை கோயில் நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் முறைகேடுகள் ஏதேனும் நடந்திருக்குமோ? என்று ஊர் பெரியவர்கள் தரப்பில் சந்தேகம் இருந்து வருகிறது. எனவே மன்னர் காலத்தில் சுவாமிக்கு வழங்கிய நகைகள் எல்லாம் அறநிலையத்துறை ஆவணங்களில் குறிப்பிட்டவாறு எண்ணிக்கை, எடை மற்றும் தரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாஜக பிரமுகர்கள் தெரிவிக்கையில் மேல் குறிப்பிட்ட கோயிலுக்கு சொந்தமான மன்னர்கள் காலத்து நகைகள் தொடர்பாக இணை ஆணையரிடம் புகார் மனு அளித்தோம்.
அவரும் உதவி ஆணையர் மூலமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர் .அதே நேரம் இந்த புகார் விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை நகை உள்ளதா? இல்லையா? என்ற பலத்த சந்தேகம் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை இந்து சமய அறநிலைத்துறை தெரிவிக்காமல் சிதம்பர ரகசியம் போல் மௌனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
