பள்ளி நிர்வாகி வீட்டுக் கதவை உடைத்து ஒன்பது பவுன் நகைகள் திருட்டு.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (63). இவர் கண்டியூரில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் தனது இரு மகள்களுடன் வழக்கமாக காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மாலையில் வீட்டுக்குத் திரும்புவார்.


இதேபோல இன்று வழக்கம் போல் காலை பள்ளிக்குச் சென்ற இவர் மீண்டும் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, முன் பக்க மரக்கதவு உடைக்கப்பட்டும், பின்புற கிரில் கதவு திறந்தும் கிடந்தன.


மேலும், வீட்டுக்குள் பூஜை அறையில் 3 பீரோக்களும், படுக்கை அறையிலுள்ள 2 பீரோக்களும் திறந்து கிடந்தும், பொருள்கள் சிதறியும் கிடந்தன. இதில், பீரோவில் இருந்த ஒன்பது நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தடயத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மர்ம நபர்கள் வீட்டுக்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
