பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்படும் சிவா லாட்ஜில் ஈரோடு சேர்ந்த செந்தில் என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார் .
அவரின் காரை, லாட்ஜின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென காரின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் இருந்து புகை வரத் தொடங்கியுள்ளது.
இந்த புகையை கண்ட விடுதி மேலாளர், செந்திலை தொடர்பு கொண்டு முயற்சி செய்துள்ளார் .ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் ஏற்பட்ட தீ மற்றும் புகையினை தண்ணீரை பாய்ச்சி அணைத்தனர்.
தொடர்ந்து மீண்டும் புகை ஏற்படவே காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து காரை திறந்தனர்.
முன்னதாக காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து மேலும் புகை மற்றும் தீ பரவுவதை தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி சில மணி நேரம் கழித்தே, காரின் உரிமையாளருக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.