பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி..
பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி,
தாம்பரம் – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் தினசரி 35 ஆயிரம் வாகனங்கள் சென்றது.
ஆனால் தற்போது 1லட்சத்து40 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றது. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்து நடைபெறுகின்றது. ஆய்வில் அதிகளவில் விபத்து தமிழகத்தில் தான் நடந்துள்ளதாக தகவல் வருகிறது.
அதனால் விபத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து பறக்கும் சாலை உருவாக்கி சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.
மேலும் கல்பாக்கம் அனு உலையில் 90சதவீதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும்.அதிலும் 50சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
இல்லை என்றால் பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் எனவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகமாகி பள்ளி கல்லூரிகள் வரை போதை பொருள் சென்றடைந்து அடுத்த தலைமுறையை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க முதல்வர் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காவல்துறைக்கு தெரியாமல் போதை பொருள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை. இந்த பிரச்சினைகளை தடுக்க தமிழக முதல்வர் தனி கவணம் எடுக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே இலக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமையும்.
அதற்கான முன்னோட்டமான தேர்தல்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தல்.. அதை சந்திக்க பாமக தயாராக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் அனைத்து சமூதாயத்தினரும் உள்ளனர். திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யவில்லை மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பை நிறைவேற்ற
வில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் பாமகவின் கெளரவ தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி,மாநில வன்னியர் சங்க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருக்கச்சூர் கி. ஆறுமுகம்,
செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் வாசு, மாவட்ட துணை தலைவர் என் எஸ். ஏகாம்பரம் மற்றும் நகர நிர்வாகிகள் ம.தணிகாசலம்,
ஜெ.அரி, நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.