பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆண்டு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி. விஷ்ணு பேச்சு.

மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 51 ஆவது ஆண்டு விழா 18.06.2022 அன்று நடைபெற்றது. கல்லூரிப் பள்ளிவாசல் பேஷ் இமாம் அப்துர்ரஹ்மான் சிராஜி இறைவாழ்த்து ஓதினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு.அப்துல் காதர் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை வழங்கினார்.
கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் வாவு எஸ்.அப்துர்ரஹ்மான், ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.ஷேக் அப்துல்காதர், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் உசேன், அல்ஹாஜ் பி.எஸ்.எம். இல்யாஸ், பேராசிரியர் எஸ்.அபுபக்கர், கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சாகுல்ஹமீது, வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டு மலர் வெளியீடு
கல்லூரி ஆண்டு மலரான சதக்கத்-2022 புத்தகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு வெளியிட, அதன் பிரதிகளைக் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி, ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் வாவு எஸ்.அப்துர் ரஹ்மான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கல்லூரிப் பருவம் மறக்க முடியாத பருவம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு இ.ஆ.ப. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பணிநிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் டாக்டர் மு.முஹம்மது சாதிக், இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் முஹம்மது அமீன், விலங்கியல் ஆய்வுக்கூட உதவியாளர் முகமது உசேன், விளையாட்டுத் துறை உதவியாளர் பரீது மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பேசும்போது, ” வாழ்வில் மாணவப் பருவம் பொற்காலம், 18 வயது முதல் 25 வரை உள்ள பருவம்தான் முக்கியமான பருவம்.
அந்த வயதுதான் சாதிக்கும் வயது. உயர்கல்விப்பணியில் பொன்விழாவை எட்டியிருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில், பேச்சு, எழுத்துத்திறன்களில் சிறந்து விளங்குகிறார்கள்.
சிறுபான்மை நலத்துறை நடத்திய பேச்சுப்போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி பதுரு நிஷா தமிழக முதலமைச்சர் அவர்களிடம் விருது பெற்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்வடைகிறேன். படிப்பு மட்டும் வாழ்வு இல்லை, விளையாட்டுத் துறையில் இக்கல்லூரி மாணவர்கள் சாதிப்பது நிறைவளிக்கிறது.
கைவினை ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது இன்றைய பொன்மொழி. பேச்சு என்பதும் மென்திறன், எழுத்து என்பதும் மென்திறன். வேலைவாய்ப்புக்கு மென்திறன் வளர்ப்பது மிகவும் அவசியம். பாடங்களோடு மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாதிக்கும் பருவத்தில் சாதிக்க வேண்டும். கல்லூரிக் காலகட்டத்தில் அமையும் நண்பர்கள் வாழ்வில் உயர்வுக்குக் காரணமாக அமைகிறார்கள்.
எனவே நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், அவர்கள் வாழ்வில் சாதிக்க உதவுவார்கள். நம் கல்வி நம்மை உயர்ந்த இலட்சியமுள்ள நல்ல மனிதத்துவத்தை உருவாக்க வேண்டும். தரமான கல்வியைத் தரும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்கு என் வாழ்த்துகள்” என்று கூறினார்.
கல்லூரியின் அரசு தவி பெறாப் பாடங்களின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா நன்றி கூறினார்.
கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
