புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? – இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு!

அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வைத்திருந்த கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் ஈபிஎஸ் தரப்பினரால் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் இன்று அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்து கட்சியை தன் வசம் கைப்பற்றி இருக்கிறார் ஈபிஎஸ். அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் வைத்திருந்த கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது ஈபிஎஸ் தரப்பு. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த கூட்டம், ஓபிஎஸ்ஸின் ஆட்சேப கடிதத்தால் சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
