பெற்றோர்களே உஷார் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பலி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகரில் வசித்து வரும் தம்பதி சேகர் – மகாலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் சாய் தருண் என்ற மகன் உள்ளான். நேற்று திடீரென மயங்கி விழுந்து சிறுவனை, தாய் மகாலட்சுமி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி தருணுக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் அதே நூடுல்ஸை தருணுக்கு காலை உணவாக கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட தருண் வேறு எந்த உணவையும் உண்ணாமல் சோர்வாக காணப்பட்டுள்ளார். மாலையில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அலர்ஜி காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை கொடுத்ததால் சிறுவன் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மை தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
