BREAKING NEWS

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற பயன்பாடுகளுக்கு இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர்.

பல வருடங்களாக லாலாபேட்டை கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இந்த குளம் நாளடைவில் தண்ணீர் வற்றிப்போய் பாழடைந்து விட்டது. இந்த குளம் லாலாபேட்டை கிராம மக்களுக்கு பொது இடமாக திகழ்ந்து வந்தது.

இந்நிலையில் பேரணாம்பட்டைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிமெண்ட் அப்துல்லா என்பவர் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து குளம் இருந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டதாக லாலாபேட்டை கிராம பொதுமக்கள் தரப்பில் கடுமையான புகாராக கூறப்படுகிறது.

இந்நிலையில் குளம் இருந்த இடத்தில் சிமெண்ட் அப்துல்லா ஏதோ கம்பெனி கட்டுவதற்காக கடகால் போட்டுள்ளார். இதையறிந்த லாலாபேட்டை கிராம மக்கள் கடகால் போடுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். லாலாபேட்டை கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்த குளம் எப்படி சிமெண்ட் அப்துல்லாவுக்கு பட்டாவானது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிமெண்ட் அப்துல்லா பட்டா செய்த காலத்தில் அப்போதைய வருவாய் துறை அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து பட்டாவை பெற்றிருப்பாரோ என்ற ஒரு சந்தேகம் லாலாபேட்டை கிராம மக்கள் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

மேலும் சிமெண்ட் அப்துல்லாவுக்கு பட்டா போட்டு கொடுத்த வருவாய் துறை அதிகாரிகள் யார்? யார்? என்ற சந்தேகமும் லாலாபேட்டை கிராம மக்களின் மனதில் எழுகிறது. தற்போது இந்த குளத்தின் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து பெரிய கலவரமாக மாறிவிடும் போல் தெரிகிறது.

இதற்கு ஒரே ஒரு தீர்வு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வருவாய் துறை அதிகாரிகளை அனுப்பி நேரில் கள ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும் என்று லாலாபேட்டை கிராம மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ போகட்டும் ஊர் பொதுமக்களுக்கு பொதுவாக இருந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனது அனுபவத்தில் பட்டா பெற்றது சிதம்பர ரகசியமாக உள்ளது. இந்த தவற்றை யார் செய்தார்களோ தெரியவில்லை.

தனி நபருக்கு பட்டா கொடுத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகளை செய்யும் அதிகாரிகள் தவறு செய்ய அஞ்சுவார்கள் என்று கிராம மக்கள் தரப்பில் ஒட்டுமொத்தமாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி தவறு செய்த அதிகாரிகள் மீது வருவாய் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதையும் மீறி நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு அமைதி காப்பார்களா? அல்லது நடவடிக்கை எடுப்பார்களா? வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்

CATEGORIES
TAGS