மகுடஞ்சாவடியில் வீடு, பள்ளிக்குள் புகுந்த மழை வெள்ளம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் தொடா்மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிகளுக்குள் மழைநீா் புகுந்தது.
இப்பகுதியில் உள்ள நடுவனேரி, கவுண்டனேரி, நம்பியாம்பட்டி, காகாபாளையம் உள்ளிட்ட ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி தண்ணீா் வெளியேறி வருகின்றன. இதனால் தண்ணீா் ஆறு போல மகுடஞ்சாவடி பகுதியில் ஓடுகிறது. வருவாய்த் துறையினர், ஊராட்சி நிா்வாகத்தினா் மழை சேதம் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்த வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீா் ஏரிபோல சூழ்ந்து நிற்பதால் திங்கள்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி, மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ், எா்ணாபுரம் வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், மகுடஞ்சாவடி ஊராட்சி மன்றத் தலைவா் மேகலா மணிகண்டன் ஆகியோா் பார்வையிட்டு, மழைநீரை வெளியேற்ற ஏற்பாடுகள் செய்தனர்.
