BREAKING NEWS

மதுரை அருகே 1,200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு!

மதுரை அருகே 1,200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் பெரிய கண்மாயில் 1,200 ஆண்டுகள் பழமையான கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளரும், தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான முனைவர் து. முனீஸ்வரன், வரலாற்று ஆய்வாளர் அருள் சந்திரன் ஆகியோர், திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் பெரிய கண்மாய் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரட்டைத் தூணுடன் குமிழித்தூம்பு எழுத்து இருப்பதைக் கண்டறிந்தனர். படி எடுத்து ஆய்வு செய்ததில் அவை, கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர், முனைவர் து. முனீஸ்வரன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், “கடந்த 25-ம் தேதி குழித்தூம்பு கல்வெட்டினைக் கண்டெடுத்தோம். அதன் காலத்தை, கல்வெட்டு வல்லுநரான சாந்தலிங்கம் உதவியுடன் இன்று உறுதி செய்தோம். ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகளுக்கு மழைநீர், வாய்க்கால் ஓடைகள் வழியாக நீர் வரும்போது நீரோடு களிம்பும், வண்டலும் சேர்ந்து வருவது நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு முக்கியக் காரணம் ஆகும். பாசன கால்வாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிடும் குமிழிகள் ஏரிக்கரையில் மதகு போல் இருப்பதில்லை. ஏரிக் கரையிலிருந்து சுமார் 200 முதல் 300 அடிகள் தள்ளி எரியின் உட்பகுதியில் இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப் பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடும்.

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கல் தளம், அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டி அமைத்து, மேற்பத்தில் நீர் போவதற்கு பெரிய ‘நீரோடித் துளையை’ உருவாக்கியிருந்தனர். சுரங்க கால்வாய் மூலம் ஏரியையும், வெளியே இருக்கும் பாசனக் கால்வாயையும் இணைத்து துளையிடப்பட்டிருக்கும்.

தூண்கள்

பாசனத் தேவைக்கேற்ப தண்ணீரின் வருகை அளவைக் குறைக்கவும், கூட்டவும் தூம்புக்கல்லைப் பயன்படுத்தினார்கள். இக்கல்லை, மேலும் கீழும் இயக்குமாறு கற் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கல் தொட்டியின் பக்கத்தில் மூன்று சிறு துளைகள் இடம்பெற்றிருக்கும். அவற்றை ‘சேரோடித் துளை’ என்பார்கள். பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு வலிமையானவர் நீந்திச் சென்று தூம்புக் கல்லை தூக்குவார். தூக்கியவுடன், நீரின் அழுத்தம் அதிகமாகிவிடும், கல் சட்டத்தில் உள்ள அழுத்தம் குறைந்துவிடும். இதனால், சேரோடித் துளை வழியே வண்டல், களிம்பு நிறைந்த நீர் வேகமாக வெளியேறும். நீரோடித் துளை வழியே 80 சதவீதம் நல்ல தண்ணீரும், 20 சதவீதம் மண் கலந்த கூழ் தண்ணீர் வெளியேறும். நீருடன் சேர்ந்து மண் கூழ் வெளியேறுவதால் சத்தான மண் பயிர்களுக்கு உரமாகும். மேலும், ஏரி பகுதியும் தூர் வழிந்து சுத்தமாகக் காணப்படும்” என்றார்.

மேலும், “பெரிய கண்மாய் மேற்கு மடைப் பகுதியிலிருந்து சுமார் 300 அடி தொலைவில் 10 அடி உயரத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் இரண்டு படுக்கை கற்கள் சிதிலமடைந்து கிடந்தன. தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு உள்ளது. கல் தூணின் உச்சிப் பகுதியில் கலசம் வடிவத்தில் தாமரை மலர் போல அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு குமிழ் தூண் நடுப்பகுதியில் ‘ஸ்ரீ தாஸகந், ஸ்ரீநாஸகந்’ என்ற வரி கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தாஸகந், நாஸகந் என்பவர்கள் குமிழித்தூம்பு கட்டிக்கொடுத்தவர்களாக இருக்கலாம் என அறிய முடிகிறது. கண்மாயின் மற்றொரு இடத்தில் குமிழித்தூம்பில் பாண்டிய மன்னர், வீரநாராயணனின் சிறப்புப் பெயர்களான கரிவரமல்லன், வீரநாராயணன் என்றும், கல்வெட்டு மேல் பகுதி வெண்கொற்றக் குடையும், அதன் இருபுறமும் சாமரங்கள் கீழ் பகுதி கலசம் மற்றும் விளக்கும் கோட்டுருவம் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு என்பது மற்றொரு சிறப்பு” என்றார் முனீஸ்வரன்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )