மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் வழிபாட்டுக்காக மயிலாடுதுறை மையப் பகுதியில் அவர்களின் வழிபாட்டு தெய்வமான சுமதி நாத் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொடியேற்ற திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆலயத்தின் கோபுரத்தின் உச்சியில் உள்ள பழைய கொடியை அகற்றிவிட்டு புதிய கொடியை பறக்க விடும் நிகழ்ச்சியை பாரம்பரியமான வழிபாட்டு முறைகளுடன் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று புதிய கொடி ஏற்றும் திருவிழா நடைபெற்றது.
பெண் மதகுருமார்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் பஜனை பாடல்கள் தீப ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. பாடலுக்கு ஏற்ப ஒவ்வொரு பக்தராக வந்து வெண்சாமரம் வீசி வழிபாடு செய்தனர். பெண் பக்தர்கள் சுமதி நாத் சிலைக்கு அட்சதை தூவி, வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து புனித கொடி ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கோபுர கலசத்தில் தூபதீபம் காட்டி பழைய கொடி கழற்றி கீழே வீசப்பட்டது. குழந்தை இல்லாதவர்கள் இந்த கொடியை பிடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் பெண் பக்தர்கள் இதனை பிடிக்க போட்டி போட்டனர்.
தொடர்ந்து ஆலய கோபுரத்தில் புனித கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.