BREAKING NEWS

மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.

மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காகச் சென்ற அப்பா மற்றும் மகன்கள் மூன்று பேர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த முகவூரைச் சேர்ந்த அய்யங்காளைக்கு, அஜீத், சுதந்திரபாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். மேலும், ராணுவ வீரரான அஜீத்திற்கு கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில், கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக அஜீத் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்தார்.

 

இந்நிலையில், இன்று காலை அய்யங்காளை தனது இரு மகன்களுடன் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி மாரநாடு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு பன்றிக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக மூவரும் சிக்கினர்.

 

இதில், அய்யங்காளை, அஜீத், சுதந்திரபாண்டி ஆகிய மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், காலையில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சிலர் மூவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர் மூவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )