மைக்கை ஆஃப் செய்து எடப்பாடியை ஆஃப் செய்த சபாநாயகர் அப்பாவு ..! கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள்..

சென்னை: சட்டசபையில் கூச்சலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மைக்கை ஆஃப் செய்த சபாநாயகர் அப்பாவு.
கேள்வி நேரத்தின் போது குறுக்கீடு செய்யாதீர்கள் என ஒரு முறை அல்ல பலமுறை கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல் சொல்லியும் அதனை எடப்பாடி பழனிசாமி காதில் வாங்கிக் கொள்ளாமல். ஓ.பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பாகவே அவர் மீண்டும் மீண்டும் பெருங்குரல் எடுத்து பிடிவாதம் பிடித்து வந்தார்.
சட்டசபை தொடங்கியவுடன் கேள்வி நேரம் ஆரம்பமானது. அமைச்சர் துரைமுருகன் எழுந்து பதில் அளிக்கத் தொடங்கியது தான் தாமதம், அதிமுக உறுப்பினர்கள் அவரை பதிலளிக்க விடாமல் கூச்சல் எழுப்பினர்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி அமர வைக்கலாம் எடப்பாடி பழனிசாமி எகிறினார். அவரிடம் முடிந்தவரை சமாதானம் பேசி பார்த்த சபாநாயகர் அப்பாவு ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து டென்ஷன் ஆனார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் மைக்கை பிடித்துக் கொண்டு கத்தினர்.
இதனால் கடும் கோபத்திற்குள்ளான சபாநாயகர் அவையின் மாண்பை கெடுப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மைக்கை ஆஃப் செய்துவிட்டார். இதனால் கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடும் வண்ணம் அவையின் மையப்பகுதிக்கு வரத் தொடங்கினர்.
அசாதாரணமான சூழல் நிலவுவதை அறிந்துகொண்ட அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது பங்குக்கு அவரும் எழுந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து பார்த்தார்.
ஆனால் யார் சமாதானத்தையும் ஏற்கும் மனநிலையில் இல்லாத அவர் தொடர்ந்து இருக்கை விவகாரத்தை பெரிது படுத்தினார்.
ஏற்கனவே மைக் ஆஃப் செய்து நோஸ்கட் செய்த சபாநாயகர் அப்பாவு இந்த முறை இருந்தால் இருக்கலாம் வெளியே செல்ல வேண்டும் என்றால் செல்லலாம் எனக் கூறி மேலும் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
சபாநாயகர் மட்டும் மைக்கை ஆஃப் செய்யவில்லை என்றால் இன்று அவை நடந்திருப்பதே கடினமாகி இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையம் என முக்கியமான இரண்டு ஆணையங்கள் அளித்த அறிக்கைகளை சட்டசபையில் வைக்க முடியாமல் போயிருக்கும்.
இதனால் தான் குடைச்சல் கொடுத்து வந்த அதிமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றி சபையை சுமூகமாக நடத்தி வருகிறார் சபாநாயகர் அப்பாவு.
