ராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது.

இக்கடையை அங்கிருந்து இடமாற்ற வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் மாதம் ஆர்ப்பாட்டம் ஜூலை மாதம் பூட்டு போடும் போராட்டம் என நடைபெற்றதில்,
ஜூலை மாதத்தில் வட்டாட்சியர் மற்றும் டாஸ்மார்க் வட்டாட்சியர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தனர். அதன் பின்னரும் கடை அகற்றப்படவில்லை.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் அனைத்து அரசியலுக்கு கட்சிகளும் இணைந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உயர் அதிகாரியிடம் பேசி விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி கூறினர்.
ஆனாலும் கடை அகற்றப்படாத நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே அக்டோபர் 3ஆம் தேதி சேத்தூர் டாஸ்மாக் கடை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இப் போராட்ட அறிவிப்பு குறித்தும் மதுக்கடையை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மனு அளித்து பேசினர். மேலும் இப்போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பப்பட்டுள்ளது.
எந்தத் துறையில் இருந்தும் பதில் வராத நிலையில் இன்று காலை 10 மணிக்கு காத்திருக்கும் போராட்டம் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்த்து டாஸ்மார்க் கடை முன்பு திரண்டனர்.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர்கள் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டாஸ்மார்க் துறையில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராமல் நாங்கள் யாரும் இங்கிருந்து செல்ல போவதில்லை என்று போராட்டக்காரர்கள் உறுதியுடன் கூறி போராட்டம் நடத்த தொடங்கினர்.
சுமார் 1.30 மணி அளவில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த டாஸ்மாக் கடையின் கோட்ட அலுவலர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோருடன் இணைந்து வட்டாட்சியர் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேற்படி டாஸ்மாக் கடையை வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் இடம் மாற்றிக் கொள்கிறோம் என டாஸ்மார்க் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இணைந்து எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மேற்படி தேதிக்குள் கடையை அகற்றவில்லையெனில் 17ஆம் தேதி அதே இடத்தில் மிக எழுச்சியோடு போராட்டம் நடைபெறும் என்ற தகவலையும் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வரும் பங்கேற்றனர்.