BREAKING NEWS

வங்கிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறிமாறி கடிதம்: முடக்கப்படுகிறது அதிமுக வங்கிக் கணக்கு?

வங்கிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறிமாறி கடிதம்: முடக்கப்படுகிறது அதிமுக வங்கிக் கணக்கு?

அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தான்தான் உண்மையான அதிமுக பொருளாளர். என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் சூழ்நிலையில் உருவாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். கேவிபி மற்றும் இந்தியன் வங்கிகளில் அதிமுக கட்சிக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் உள்ளன.

இந்நிலையில் அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருதரப்பு கடிதங்களும் வங்கிகளுக்குக் கிடைத்த நிலையில், கட்சி பதவிகளில் சட்டச் சிக்கல் நீடிப்பதால் வங்கிக் கணக்குகளை முடக்கும் முடிவை வங்கிகள் எடுக்கலாம் என்பதால் அதிமுகவில் பரபரப்பு நிலவிவருகிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )