வரி வசூல் தொடர்பான கணக்கை கேட்ட அதிமுக கவுன்சிலர். கேள்வி கேட்க கூடாது என பதில் அளித்த தலைவரால் பெரும் வாக்குவாதம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இன்று நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் வருட ஏலம் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் 8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலம் விடுவது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு அதற்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு ஏலம் தொடர்பான ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த கூட்டத்தின்போது, அதிமுகவை சேர்ந்த 3-ஆவது வார்டு உறுப்பினர் சுபா என்பவர் எழுந்து நகராட்சியில் ஏப்ரல் மாத வரிவசூல் கணக்கு தொடர்பான கேள்வியை கேட்டார். இந்த கேள்விக்கு உரிய முறையில் பதில் அளிக்க முடியாமல் திணறிய தலைவர் மற்றும் அதிகாரிகள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.
இருந்தபோதும், நகர்மன்றத் தலைவர் கேள்வி கேட்ட 3 -வது வார்டு உறுப்பினர் சுபாவிடம் நீங்கள் தான் தொடர்ந்து கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் மட்டும் கேள்வி கேட்டால் மற்றவர்கள் எப்படி கேள்வி கேட்பது என்று கூறினார்.
இதனால் நகரமன்ற கூட்டத்தின் போது 3-வது வார்டு அதிமுக உறுப்பினருக்கும், தலைவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் காரணமாக நகர்மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
