வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் தெப்பத் திருவிழா 16ஆம் தேதி இரவு தொடங்கியது.
முதல் நாளான 16ஆம் தேதி உற்சவர் வள்ளி ,தெய்வானை சமேதரராக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சரவணப் பொய்கை தீர்த்தத்தில் மிதந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பம் குளத்தைச் சுற்றி வந்ததும் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது. அத்துடன் கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை வள்ளிமலையில் இருந்து வேலூர் வரை இயக்கியது.