வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்பகோணம் -தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது ஏழ்மை நிலை கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மொட்டை கோபுரம் வாசல் பகுதியில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து பாதிப்பு இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
