BREAKING NEWS

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 

விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! 

வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம்.

இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் தவிர்த்து வேறு என்னெல்லாம் வசூல் செய்து கொள்ளலாம் என்று முதலில் திட்டமிடுகிறார்.

பின்னர் அந்த வசூல் வேட்டையில் நேரடியாகவே களம் இறங்குகிறார் தைரியமாக. இவர் ஏற்கனவே வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றினார்.

அங்கிருந்த போதும் என்னென்ன சமூக விரோதச் செயல்கள் உள்ளனவோ அவற்றிற்கெல்லாம் நேரடியாக துணை போவது, அதில் பணம் பார்ப்பது என்று தனது செயல்பாட்டை வைத்திருந்தார் சுபா.

இது வேலூர் சரக டிஐஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து அணைக்கட்டு காவல் உட்கோட்டதிற்கு உட்பட்ட விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய பகுதியில் பாலாறு செல்வதால் ஆற்று மணல் பிசினஸ் அமோகமாக நடந்து வந்தது .இதை மோப்பம் பிடித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் சுபா மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு பகல், இரவு பாராமல் லாரிகளில் ஆற்று மணல் கடத்த தைரியமாக அனுமதி கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இவர் ஒரு பெரிய வருவாயை மாதந்தோறும் பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அணைக்கட்டு டிஎஸ்பியாக நந்தகுமார் பணியாற்றி வருகிறார்.

இவர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி விட்டு தற்போது அணைக்கட்டு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவரது எல்லைக்கு உட்பட்ட பகுதியான விரிஞ்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இப்படி சமூக விரோதிகளுடன் இணக்கமாக இருந்து கொண்டு தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.

காவல் ஆய்வாளர் சுபா பயமின்றி பணியாற்றிட இவருக்கு பின்புலம் யார் என்று தெரியவில்லை. இது தெரிந்தும் அணைக்கட்டு டிஎஸ்பி கண்டும் காணாமல் விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பகல், இரவு நேரங்களில் தொடர்ந்து வாகனங்களில் மணல் கடத்தப்படுவது நிறுத்துவதே இல்லை என்று சொல்லலாம்.

இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்து விட்டு வயதான முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் காவல் ஆய்வாளர் சுபா தனது பாக்கெட் நிரம்பினால் போதும் என்ற ரீதியில் பணியாற்றி வருவதாக இந்தப் பகுதி வாழ் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரிகள் தொடர்ந்து இந்த பகுதியில் செல்வதால் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உருமாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள மயில்வாகனன் தனது பங்கிற்கு விரிஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மணல் மாஃபியாக்களை அடக்கி ஒடுக்கி கைது செய்ய வேண்டிய கண்ணியமிகு காவல்துறை அதிகாரி ஒருவர் சமூக விரோதிகளுடனேயே மணல் மாஃபியாக்களுடனேயே கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

இந்த நிலை மாறுமா? அல்லது தொடருமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இந்த பிரச்சனையில் தலையிட்டு விசாரணை நடத்துவாரா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் 

 

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன் 

CATEGORIES
TAGS