வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!
உரிய காரணங்கள் இன்றி பயிற்சிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1303 வாக்குச்சாவடிகள் மற்றும் 4 துணை வாக்குச்சாவடிகள் என 1307 வாக்குச்சாவடிகளில், 6272 நபர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர்.இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 5 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.
வேலூரில் டி.கே.எம். மகளிர் காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்து வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்,”வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முதல் நாள் என்பதால் இன்று ஒரு சிலர் பயிற்சிக்கு தாமதமாக வந்தார்கள். வரும் நாட்களில் தாமதம் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட உரிய காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும், என கூறினார்.