ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்கு வீடுகளில் கொடுக்கப்படும் இணைப்பு குழாய்களில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
அதனை ஒரு சில நாட்களில் அகற்றிட உத்ரவிடப்பட்டுள்ளது. மழை நீர்வரத்துக்கால்வாய்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜி ராவ்நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த பகுதியில் ஆய்வு செய்து அந்தப் பணிகளை சிறப்பாக செய்திட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீர்வழிபாதை கால்வாயில் எந்தவிதமான கட்டிட ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது துணை மேயர் சுனில் குமார் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.