ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையை நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு ஊரின் கீழ்பகுதியில் உள்ள 100 மீட்டர் அகலமுள்ள வாய்க்காலை தாண்டித்தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. வருடத்தின் 8 மாத காலம் இந்த வாய்க்காலில் கழுத்தளவிற்கு தண்ணீர் செல்லும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இதே நிலையில் தான் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வாய்க்காலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு இந்த வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் இறந்தவர் உடலை கொண்டு சென்றனர்.
சிறிது தவறினாலும் இறந்தவர் உடலை கொண்டு சென்றவர்கள் நீரில் மூழ்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால், இந்த வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி சென்று தான் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியும். இந்த பிரச்சனை சுமார் 50 ஆண்டு காலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் நாங்கள் தவித்து வருகிறோம்.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்களுக்கு இந்த வாய்க்காலை கடக்க பாலம் அமைத்து தர வேண்டும் அல்லது மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.