14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.
![14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு. 14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-01-at-11.45.13-AM-e1654064133582.jpeg)
திருப்பூர் மாவட்டம்,தாராபும் வட்டம்,குளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள ஆலம்பாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் பழமையான சத்திரம் ஒன்று இருப்பதாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு ஆய்வு மையத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் வீ.அரிஸ்டாட்டில் மற்றும் முனைவர். மு.இலட்சுமண மூர்த்தி ஆகியோர் பழமையான சத்திரத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு அவர்கள் இருவரும் தெரிவித்ததாவது; இது ஒரு பழமையான சத்திரம். 12 கல் தூண்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சத்திரம் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. இந்த பழமையான சத்திரத்தில் 5 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.இங்குள்ள கல்வெட்டுகள் தொடர்பற்று காணப்படுகிறது இதற்கு காரணம் இந்த சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டபோது கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம். இதன் மறு கட்டமைப்பு காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். கல்வெட்டின் அடிப்படையில் பார்த்தால் இந்த கல்வெட்டு 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இந்த கல்வெட்டில் குறுநில மன்னன் கலியஅதியமான் என்பவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. ராஜராஜேஸ்வரி என்ற நபர் கலிய அதியமானின் கீழ் கட்டுப்பட்டவர், இந்த சத்திரத்தை பாதுகாத்தார் அல்லது பொறுப்பாளராக இருந்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்கு மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது.
வழிப்போக்கர்கள் மட்டுமல்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சத்திரம் செயல்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகிறது. இங்கு உள்ள கல்வெட்டு கூறும் பிற செய்திகளாவன; உணவு வழங்குவதற்கு தேவையான செலவினங்களுக்காக கொடையாக வழங்கப்பட்ட நஞ்சை நிலங்களை பற்றி குறிப்பிடுகிறது. தானமாக வழங்கப்பட்ட கழஞ்சு, பொன் பற்றிய குறிப்புகள் உள்ளன.ஆனால் கல்வெட்டுக்கள் தொடர்ச்சியாக இல்லாததால் தகவல்கள் முழுமையாக அறியும் வாய்ப்பில்லை. சத்திரத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படும் பெயர்களாவன; கலியஅதியமான்,ராஜராஜேஸ்வரி, கலி உலகா என்றும் , கழஞ்சு, பொன், நஞ்சை மற்றும் நிறைஇலி போன்ற சொற்களும் காணப்படுகின்றன.இந்த சத்திரம் எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன என்று கூறினர்.